அனுபவம் புதுமை - சிறுகதை
சென்னைக்கு நான் புதிதா அல்லது சென்னை எனக்கு புதிதா என்ற குழப்பம் இன்னமும் எனக்குத் தீரவில்லை. வந்து இரண்டு நாளாயிற்று. எங்கு எப்படி போகவேண்டுமென்று எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை. யாரைக் கேட்டாலும் மிகத் தெளிவாக பதில் சொல்கிறார்கள். சாரி… தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கூட தெரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது.
வந்தநாளே அறையில் குளித்து முடித்துவிட்டு ட்ரெயினிங் கிளாஸிற்கு செல்வதற்காக தெரியாமல் லேடீஸ் பஸ்சில் ஏறிவிட்டேன். பஸ்ஸில் உள்ள எல்லோரும் என்னை அற்ப ஜந்துவைப் போல பார்த்தார்கள். உடன் விசில் ஊதி இறக்கிவிட்டார்கள். பஸ் நிறுத்தத்தில் உள்ள எல்லோரும் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். சென்னையில் ஒருவாரம் ஓட்டி விடலாம் என்ற கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. ஒருவாரம் சென்னையில் எப்படிதான் குப்பை கொட்டப் போகிறேனோ தெரியவில்லை.
காலை வேளையில் எல்லாரும் அவரவர் வேலையில் பரபரப்பாக இருந்தனர். எனக்கு மற்றவரிடம் விசாரிப்பதற்கே கூச்சமாக இருந்தது. கோட், சூட், டை எல்லாம் கட்டியிருக்கும் நான் விசாரிப்பதைப் பார்த்தால், கண்டிப்பாய் மனதிற்குள் சிரிப்பார்கள். எப்படியோ பக்கத்தில் நிற்பவர்களிடம் மெல்ல விசாரித்து, 27D ஏறி எக்மோர் போய் சேர்வதற்குள் ‘எக்மோர் வந்தால் சொல்லுங்க’ என அருகில் நின்று இருந்தவரை ஆயிரம் முறை கடுப்படித்தேன். வேறு வழியில்லை. இதுவரை காலையிலிருந்து பத்து இருபது சென்னைவாசிகளாவது என்னை மனதிற்குள் திட்டியிருப்பார்கள். அருகில் இருந்தவர் ‘எக்மோர் வந்திடுச்சு இறங்குங்க’ என, நான் அவரை விட்டு போனாலே போதும் என்று, முறைத்துக் கொண்டே சொன்னார். அவரைப் பார்த்து கொஞ்சம் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு இறங்கினேன். நான் இறங்கி அவரின் கஷ்டத்தைத் தீர்த்ததற்கு கண்டிப்பாக அவரின் குலதெய்வத்துக்கு ஏதேனும் வேண்டுதல் நேர்ந்திருப்பார்.
இன்றாவது யாரிடமும் எதையும் கேட்காமல் உருப்படியாய் போய்ச் சேர வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். காலை வேளை பஸ்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வந்தது. நான் ஏறவேண்டிய பஸ் வந்தது. கூட்டத்தில் இடித்துக் கொண்டே ஏறி ஓர் ஓரமாக நின்று கொண்டேன். எனக்கு அருகில் ஒரு பெரியவர் ஏறி நின்று கொண்டார். அவர் கூட்ட நெரிசலில் என்னைத் தள்ளி தள்ளி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தார். நான் கடுப்பானேன். நானே நிறுத்தங்களைக் கணக்கு போட்டுக் கொண்டு தினமும் இறங்கிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் பிசகினால் நிறுத்தத்தை தவறவிட்டு அடுத்த நிறுத்தத்தில் போய் இறங்க வேண்டிவரும். அந்தப் பெரியவர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார். ‘தம்பி கொஞ்சம் புதுப்பேட்டை வந்தால் சொல்லுங்க’ என்றார். எனக்கு தலை சுற்றியது. நானே தடுமாறிக் கொண்டிருக்கிறேன். அதில் இவர் வேறு. எசகுபிசகாக தலையாட்டி வைத்தேன்.
சாந்தி தியேட்டருக்கு அடுத்து வளைந்து சிறிய அம்மன் கோவிலுக்கு அடுத்து ஒரு தியேட்டரைத் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் புதுப்பேட்டை என நினைவு படுத்திக் கொண்டேன். அவருக்கு சரியான இடம் வந்ததும் சொல்ல வேண்டும் என மனதில் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே, ஜன்னலில் எதை எதை தாண்டிச் செல்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டே வந்தேன். அவர் என்னை நம்பி அமைதியாக நின்று கொண்டிருந்தார். ரோட்டைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
யாரோ ஓர் அம்மா இடுப்பில் ஒரு குழந்தையுடனும் கையில் ஒரு குழந்தையையும் வைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள். நானும் இப்படித்தான். சிறு வயதில் எப்போதும் என் தாயின் பின்னாலேயே திரிந்து கொண்டிருப்பேன். எப்போதும் விட்டு பிரிய மாட்டேன். அது பெரும் தொல்லையாகவும் அவளுக்கு இருந்தது. ஒரு சமயம் அவள் ஊருக்கு சென்று திரும்பி வர இரண்டு நாளாயிற்று. முதல் நாள் எப்படியோ கழித்துவிட்டேன். ஆனால் இரண்டாவது நாள் எனக்கு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. அதிலிருந்து எங்கு சென்றாலும் என்னை கூட்டிக் கொண்டே சென்றாள். அதனால்தான் இப்போதும் எங்கு தனியாக சென்றாலும் துணிந்து ஒன்றை செய்வதற்கு எனக்கு தைரியம் வருவதில்லை. என் அலுவலகத்தில் ஏற்றுமதி பயிற்சி வகுப்பிற்காக சென்னைக்கு என்னை அனுப்பியிருக்கிறார்கள். செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நண்பனின் அறையில் தங்கிக் கொண்டேன். ஆனால் தினமும் நான் படும் அவஸ்தையை யாரிடம் போய் சொல்வது எனத் தெரியவில்லை.
திடீரென்று யாரோ ‘கொஞ்சம் நகருங்க’ எனக் கூறும் குரல் கேட்டது. அடக் கடவுளே இவ்வளவு நேரம் ரோடு, பெரியவர், புதுப்பேட்டை, எக்மோர் என எதையுமே கவனிக்காமல் விட்டுவிட்டேனே. பெரியவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. எங்கு வந்திருக்கிறோம் என்பதை ஜன்னலில் பார்த்தேன். இடம் புதியதாக இருந்தது. நான் முழிப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர், ‘அந்தப் பெரியவர் முன்னமே இறங்கிப் போய்விட்டார்’ என்றார். ‘நீங்க எங்க இறங்கணும்?’ என்று அவர் கேட்டதற்கு எக்மோர் என்றேன். ‘ஐயோ... அது இரண்டு ஸ்டாப்பிங் முன்னமே சென்று விட்டது’ என்றார். எனக்கு பகீரென்று தூக்கிவாரிப் போட்டது. இது சரிப்பட்டு வராது. ஒன்று தங்கியிருக்கும் இடத்தை பயிற்சி வகுப்பிற்கு அருகில் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தினமும் ஆட்டோவில் வரவேண்டும். ஆட்டோவிற்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை நினைத்தால் பயமாக இருந்தது. எனவே அறையை பயிற்சி வகுப்பு இருக்கும் இடத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என தீர்மானித்தபடியே அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வகுப்பு நடக்கும் இடத்திற்கு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.