Wednesday, June 15, 2005

கணினி அகராதியில் சில பக்கங்கள் - 2 (முன்னுரை)

முன்னுரை...

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கடின உழைப்பிற்கு பிறகு, ‘எளிய தமிழ் கணினி கலைச்சொற்களஞ்சிய அகராதி’ என்ற இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. மற்ற கணினி அகராதியைப் போல், ஒரு குறிப்பிட்ட சொல்லிற்கு அதன் தமிழ் மொழிப் பெயர்ப்பைக் கூறாமல், அதனைப் பற்றிய முழுமையான விபரம் இயன்ற அளவிற்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.தொழில்நுட்ப நூலினைப் பொறுத்தவரை முழுமையாக தமிழில் கொண்டு வருதல் என்பது இயலாத காரியம். ஆங்கில சொற்களின் கலப்பை தவிர்க்க முடியாது. அதுவும் குறிப்பாக கம்ப்யூட்டரைப் பற்றிய நூலில் பெரும்பாலும் சாத்தியமில்லை. அவ்வாறு ஆங்கிலம் கலவாமல் ஒவ்வொரு சொல்லையும் தமிழ்ப்படுத்திக் கூறினால், அந்த நூல் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும். நடைமுறை பயன்பாட்டிற்கு உதவாது. இதற்கு பல உதாரணங்கள் புத்தக உலகில் உள்ளன. எனவேதான் இந்த நூலில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியில் முழுமையான கணினி என்பது இன்னமும் எட்டாத ஒன்றாக உள்ளது. அவ்வாறு முழுமையடைந்தாலும், அதில் கம்ப்யூட்டரைப் பற்றிய புதிய மேம்பாடுகளை அவ்வப்போது தமிழில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான பயனை அடைய முடியும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் நிலை இருக்காது. அதன் மூலம் நாம் கம்ப்யூட்டர் துறையில் மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும்.இந்த அகராதியைப் பொறுத்த வரையில், ஆபரேட்டிங் சிஸ்டம், நெட்வொர்க், சாப்ட்வேர், இண்டர்நெட், கம்ப்யூட்டர் தரம், வரையறை, கம்ப்யூட்டர் மொழிகள் என கம்ப்யூட்டர் துறையின் பல பிரிவுகள் தொடர்பான, ஏறக்குறைய 6500 சொற்கள் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும், அடைப்புக்குறியினுள் அது கம்ப்யூட்டர் துறையின் எந்தப் பிரிவைச் சார்ந்தது என்ற குறிப்புடன் விளக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சொல் கம்ப்யூட்டர் துறையின் எந்தப் பிரிவைச் சார்ந்தது என்பதை எளிதில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த நூலின் இறுதியில் பிற்சேர்க்கைப் பகுதியில் கம்ப்யூட்டர் துறையின் சுருக்கச் சொற்களுக்கான விரிவாக்கம், நெட்வொர்க்கிங்கில் பயன்படுத்தப்படும் நாட்டுப் பெயர்களின் சுருக்கப்பட்டியல், கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும், பல்வேறு •பைல்களின் வகையைக் குறிப்பிடும் •பைல் பெயர் எக்ஸ்டென்சன் பட்டியல் போன்றவைக் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உங்களுக்கு அதிகம் பயன்படும் என நம்புகிறோம். இந்த நூல் தொடர்பான விமர்சனங்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன. இந்த நூலில் காணப்படும் நிறைகள், குறைகளைச் சுட்டிக் காட்டினால், அவை அடுத்த பதிப்பில் சரி செய்து நூலை மேலும் செம்மையாக வெளியிட உதவியாக இருக்கும். அவ்வாறு சுட்டிக் காட்டி அனுப்புவோருக்கு நன்றியுடையவனாக இருப்பேன். உங்கள் விமர்சனங்களை parasuraman_india@yahoo.com என்ற ஈமெயில் முகவரிக்கோ அல்லது கீழே உள்ள முகவரிக்கோ அனுப்புங்கள்.மணிமேகலைப் பிரசுரத்தில் இது எனது மூன்றாவது நூல். இந்த அகராதியை சிறப்பு நூலாக வெளியிட்டிருக்கும் மணிமேகலைப் பிரசுர நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் உள்ள பிழைகளை திருத்திக் கொடுத்த திரு.சந்திரசேகர் அவர்களுக்கும், இந்த நூலை சிறப்பாக அச்சிட்டு கொடுத்த அச்சகத்தாருக்கும் எனது நன்றி. இந்த நூலை எழுதுவதில் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திய எனது நண்பர்கள் திரு.V.தேவராஜு மற்றும் K.ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும், இந்த நூலை எழுதுவதில் எனக்கு பலவழிகளில் உதவி செய்த எனது மனைவிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவை எல்லாவற்றுக்கும் மேல் இந்த நூலை வாங்கி ஆதரவு கொடுக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன்,த.பரசுராமன்.7, பிள்ளையார் கோவில் தெரு,தேவாங்கபுரம், பள்ளிபாளையம்,ஈரோடு - 638 006.ஈமெயில் : parasuraman_india@yahoo.com

அடுத்த பதிவில் அகராதியின் பக்கங்கள்.......