Monday, February 14, 2005

தேவதை எஸ்கேப் - பிச்சாண்டியின் காதல் அனுபவங்கள்

வணக்கமுங்க. எம்பேரு பிச்சாண்டி. இன்னிக்கு என்னோட டாவு எக்ஸ்பிரீயன்ஸ உங்ககிட்ட சொல்லி என்னோட மனபாரத்தை இறக்கிடலாமுன்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு முழுசா படிச்சுட்டு அப்புறம் எங்க வேணாலும் போங்க. தர்ம மாத்து மாத்தறதுன்னா முன்னாடியே சொல்லிருங்க. அட்ரஸ் தர்றேன். என் ஃபிரண்ட் அங்கதான் இருப்பான். என்ன வேணாலும் பண்ணிக்குங்க..! நான் கேட்க மாட்டேன். இலவச இணைப்பா எப்ப பாத்தாலும் ஓசு டீ கேட்டு தொந்திரவு பண்ற இன்னொருத்தனும் அங்கதான் சுத்திட்டு இருப்பான். அவனையும் முடிஞ்சா பின்னி எடுங்க. அதுக்கு தனியா அமவுண்ட் உங்க அட்ரஸுக்கு அனுப்பி வைக்கிறேன். ஹி...ஹி...ஹி...!!

நான் படிச்சது அஞ்சாவதுதாங்க. ஆனா என் டாவு காலேஜுல்லாம் போச்சு. அப்ப என் டாவு படிச்ச காலேஜு வாசல்தான் நான் டீ கடை வெச்சிருந்தேன். கொஞ்சம் ரீஜண்டா கடை இருந்ததுனால என் டாவு எப்பவும் என் கடைக்குதான் வருவா. என்னைப் பாத்ததும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க. அந்த சிரிப்புக்கே எனக்கே தெரியாம நெறைய பேத்துக்கு ஃபிரீயா டீ போட்டு குடுத்திருக்கேன். குடிச்சிட்டு ஒரு வழி வழிஞ்சுட்டு போவாங்க. அப்புறந்தான் தெரியும் நான் டீக்கு காசு வாங்கலைன்னு. போனா போகுதுங்க. என் தேவதைக்கு முன்னால டீ காசு என்னங்க பெருசு. இப்படியே ஒரு வருசம் ஓடிடுச்சிங்க. டெய்லியும் சிரிப்பும் ஃபிரீ டீயுமாவே போச்சிங்க.

அப்புறந்தாங்க எனக்குன்னு ஒரு வில்லன் வந்தான். அவனைப் பாத்தா சோதா மாதிரிதாங்க இருந்தான். அவன் என் டாவோட கொஞ்சுற கொஞ்சல்ஸ் இருக்கு பாருங்க. அதுக்காகவே நிறைய நாளு அவனுக்கு டீயில நிறைய சுடுதண்ணி புடிச்சி டீ போட்டிருக்கேன். அவனும் அவளைப் பாத்திட்டு ஜொள் விட்டுட்டு குடிச்சிடுவான். இவனை எப்படி என்னோட டாவுகிட்ட இருந்து கழட்டி விடறதுன்னு யோசனை பண்ணினேன். அதுக்கும் ஒரு சான்ஸ் வந்திச்சி.

ஒருநாள் அவன் இல்லாம என் டாவு மட்டும் தனியா வந்திச்சி. இதுதான் சான்ஸ் விட்றக்கூடாதுன்னு நினைச்சு முதல் பாணத்தை விட்டேன். 'அம்மு. அவன் இன்னிக்கி வரலையா..?' அம்முங்கறது என் டாவுக்கு நான் வெச்ச செல்லபேருங்க. என் டாவை பேர் சொல்லி நான் கூப்பிடமாட்டேன். உங்களுக்கும் கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஏமாந்தீங்களா... (நான் ஏமாந்தது பின்னாடி இருங்குதுங்க..!). 'வரலை'ன்னு என் டாவுவின் வாய்ஸ் தேன் மாதிரி வந்திச்சி. நான் என்னோட கதையை அவுத்துவுட்டேன். ' அம்மு அவன் நேத்து எங்கிட்ட வந்தான். அவன் உன்னை லவ் பண்றதா சொன்னான். இனிமே அவன்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்க. இனிமே அவன்கிட்ட பேசாதே.' அடுக்கடுக்கா ரீல் உட்டேன். என் டாவு ஒருமாதிரி ஆச்சி. ஆஹா மேட்டர் ஒர்க் அவுட் ஆயிடுச்சினு நினைச்சேன். ஆனா அதுக்கு அடுத்தது என் டாவு பேசினது கேட்டு, என் டீகடை பாயிலர், கண்ணாடி கிளாசு, பால் குண்டா... எதிர்தாப்புல சைக்கிள்ல போறவன், அப்புறம் என் இதயம் எல்லாத்திலையும் ஒரு தவுசன்வாலா வெடி வெடிச்ச மாதிரி சவுண்ட் கேட்டிச்சி. 'நான் அவன்கிட்ட நேத்து என்னோட லவ்வ சொல்லிட்டேன். ஆனா அவன் எனக்கு பதில் சொல்லை. அத உங்கிட்ட வந்து சொல்லிட்டு போயிட்டானா... அவனை நான் பாத்துக்குறேன்.' சொல்லிட்டு என் டாவு பறந்து போயிடிச்சி. நான் வெச்ச குண்டு எனக்கே வெடிச்சிடிச்சி.

சரி என்ன பண்றதுன்னு எம்மனச நானே தேத்திகிட்டேன். இதுக்காகவெல்லாம் நான் சோகமா மாற முடியுங்களா... அப்படி ஆகனும்னா நான் இதுவரைக்கும் பதினாலு டாவை இப்படி விட்டிருக்கேன். சரி விடுங்க. ஃபீல் பண்ணாதீங்க. அடுத்த டாவு மாட்டமல போவும்....