Wednesday, February 09, 2005

கணினி மகா அகராதி வெளியீடு - செய்தி

(நான் எழுதிய 'கணினி மகா அகராதி' நூல் வெளியீட்டைப் பற்றி 16.01.2005 அன்று தினமலர் சென்னை பதிப்பில் வெளிவந்த செய்தி அப்படியே கீழே...)

சென்னை, ஜனவரி 16 - மணிமேகலை பிரசுரத்தின் சார்பில் பரசுராமன் எழுதிய 'கணினி மகா அகராதி' மற்றும் விஜிரவி எழுதிய 'செட்டி நாட்டு அறுசுவை சமையல்' ஆகிய இரண்டு புதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை புத்தக கண்காட்சியில் நேற்று நடந்தது.

விழாவிற்கு அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவிதமிழ்வாணன் வரவேற்றார். பரசுராமன் எழுதிய 'கணினி மகா அகராதி' நூலை கணினி வல்லுநர் லேனாகண்ணப்பன் வெளியிட்டார். முதல் பிரதியை அமெரிக்காவைச் சேர்ந்த தமிழர் ஏ.பி.ஸ்டீபன் பெற்றுக் கொண்டர்.

விஜிரவி எழுதிய 'செட்டிநாட்டு அறுசுவை சமையல்' நூலை பிரபல சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத் வெளியிட மற்றொரு சமையல் கலை வல்லுநர் ரேவதி சண்முகம் பெற்றுக் கொண்டார். விழாவில், முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் பேசுகையில், 'கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சொற்களை முழுமையாக தமிழ் மொழியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆறாயிரத்திற்கு மேற்பட்ட தொழில்நுட்ப சொற்களை தமிழில் எளிமையாக ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை விவரித்தும் எழுதியுள்ளார். இந்நூல் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அனைவருக்கும் பெரிதும் பயன்படும்' என்றார்.

கண்ணதாசன் பதிப்பகத்தைச் சார்ந்த காந்தி கண்ணதாசன் பேசுகையில், 'இதுவரை வெளியான கம்ப்யூட்டர் அகராதி நூல்களில் மிகச் சிறந்த நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.' என்றார்.

லேனா தமிழ்வாணன் பேசுகையில், 'மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாதி நூல்கள் தொடர்ந்து விற்பனையில் இருக்கின்றன. இந்தச் சாதனையை மணிமேகலைப் பிரசுரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. தற்போது படிக்கும் பழக்கத்தைவிட பார்க்கும் பழக்கமே அதிகமாக இருக்கிறது.

இந்நிலை மாறி படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும். படிக்கும் பழக்கம் அதிகரித்தால்தான் நாடு முன்னேறும்' என்றார். பின்னர் நூல் ஆசிரியர்கள் பேசினர். விழாவில், ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்டனர்.