Monday, June 27, 2005

படையப்பா - Part II

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, தனுஷ், ரஜினியின் பேரன் (பேர் தெரியவில்லை) இணைந்து கலக்கும் படையப்பா Part-II விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கன்னடத்தில் அறிமுகம் ஆகியுள்ள புதுமுகம் நடிக்கவிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியின் பேரன் அறிமுகம் ஆக உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் பட்ஜெட் ஐம்பது கோடி என தயாரிப்பாளர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்தப் படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

(சும்மா..தமாசுங்க... http://yaalisai.blogspot.com/2005/06/blog-post_27.html இந்தப் பதிவைப் பார்த்ததால வந்த நினைப்புங்க.... கண்டிப்பா மேலே சொன்னது ஒருநாளு நடக்கத்தான் போகுது... பார்க்கலாம்)

Wednesday, June 15, 2005

ஷக்கலக்க பேபி... ஷக்கலக்க பேபி...

அப்பாடா..... வலைப்பதிவு ஆரம்பித்து ஆறுமாசமாச்சு. இப்போ இந்தக் குழந்தைக்கு ஆறு மாசம். ஷக்கலக்க பேபி இப்பதான் எல்லாத்தையும் பாக்க ஆரம்பிச்சிருக்கு. இனிமேதான் மத்த அண்ணாக்களை போல வளரணும். இன்னும் ஏறவேண்டிய தூரம் எவ்ளோ இருக்கு.... நீங்க எல்லாரும் இதுக்கு சப்போட் பண்ணனும்..... அடிக்கடி இந்தப் பக்கத்துக்கு வந்து பாருங்க... நட்சத்திரத்தை அப்படியே மவுஸால ஒரு கிளிக் பண்ணிட்டு போங்க. முடிஞ்ச உங்க கருத்தையும் சொல்லுங்க. ஒரு வருசத்துல யாரு அதிக கருத்தை போடறாங்களோ அவங்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திட்டு இருக்கு.... மறந்துடாதீங்க.....

கணினி அகராதியில் சில பக்கங்கள் - 3

:) (உணர்ச்சி ஐகான்கள்) சாட்டிங், ஈமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் செய்திகளில் பயன்படுத்தப்படும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உள்ள ஐகான் ஆகும். கொடுக்கப்பட்டிருப்பது ஒரு ஸ்மைலி - சிரிக்கின்ற ஐகான் ஆகும். இது போன்று இன்னும் பல ஐகான்கள் உள்ளன. இவ்வகையான ஐகான்கள் இண்டர்நெட்டில் ஷார்ட் ஹாண்டிற்கு இணையானவை.

123 (ப்ரோக்ராம்) டாஸ் அமைப்பி‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ல் உள்ள ஒரு spread sheet அப்ளிகேஷன்.

1802 (மைக்ரோபிராஸஸர்) இது ஒரு 8 பிட் மைக்ரோபிராஸஸர். இது தற்போது HARRIS Semiconductor எ‎ன்ற நிறுவனத்தால் CDP1802 எ‎ன்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.

3270 (IBM டெர்மினல்) மிகப் பிரபலமான IBM லார்ஜ் பிரேம் டெர்மினல்களுக்கு IBM வழங்கிய நியூமெரிக் சொல். இது ஒரு நான்-ப்ரோக்ராமபிள் (non-programmable) டெர்மினல் இன்டர்பேஸ்.

404 (பிழை எண்) இண்டர்நெட்டில் தளங்களைப் பார்க்கும் போது வரும் ஒரு பிழை செய்தி. அதாவது ‘File not found’ - நீங்கள் தேடும் •பைல் இல்லை’ எனக் காட்டும் தகவல். இவ்வாறு காட்டுவதற்கான காரணம் நீங்கள் டைப் செய்த சொற்களில் ஏதேனும் எழுத்துப் பிழைகள் இருக்கலாம் அல்லது நீங்கள் டைப் செய்த தளத்தின் பெயர் தவறாக இருக்கலாம் அல்லது நீங்கள் தேடும் தளத்தின் சர்வர் வேகம் குறைந்தும் (down) இருக்கலாம்.

4004 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒரு மைக்ரோ பிராஸஸர். இது 1971-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 108 Khz கிளாக் வேகம் மற்றும் 4 பிட் பஸ் போன்ற தன்மைகளை உடையது.

6501 (ஹார்டுவேர்) MOS Technologies மூலம் விற்கப்பட்ட முதல் 8 பிட் மைக்ரோ பிராஸஸர். இது ஒர் ஆ‎ன்-சிப் (on-chip) கிளாக் ஊசலை கொண்டது.

6502 (ஹார்டுவேர்) 1975-ம் ஆண்டு வாக்கில் MOS Technologies-ஆல் வடிவமைக்கப்பட்டு Rockwell-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு 8 பிட் மைக்ரோபிராஸஸர். இது இன்டல் 8080 போலல்லாமல் சில ரெஜிஸ்டர்களை மட்டுமே கொண்டது. இது 16 பிட் முகவரியுடன் உட‎ன் கூடிய 8 பிட் பிராஸஸர். இத‎ன் உட்பகுதியில் ஒரு 8 பிட் டேட்டா ரெஜிஸ்டர் (accumulator), இரண்டு 8 பிட் இன்டக்ஸ் ரெஜிஸ்டர் மற்றும் ஒரு 8 பிட் stack பாயிண்டர் போ‎ன்றவற்றைக் கொண்டதாகும். 6502 பிராஸஸர் அறிமுகப் படுத்தப்பட்டபோது CPU-வை விட RAM ஆனது வேகமாக செயல்படும் த‎ன்மை கொண்டதாக இருந்தது. எனவே இத‎ன் செயல்பாடுகள் ஒரு சிப்பில் (Chip) உள்ள ரெஜிஸ்டர்களி‎ன் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்கு பதிலாக, RAM-ஐ அணுகுவதற்கு சாதகமாகவே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த 6502 பிராஸஸரானது BBC மைக்ரோ கம்ப்யூட்டர், ஆப்பிள்II, Commodore, Atari பர்சனல் கம்ப்யூட்டர் போ‎ன்றவற்றில் பய‎ன்படுத்தப்பட்டது. 65816 எ‎ன்ற பிராஸஸர் இத‎ன் மேம்பட்ட வெளியீடாகும்.

6800 (மைக்ரோபிராஸஸர்) Motorola குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர் ஆகும். 1974-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1 மற்றும் 2 Mhz கிளாக் வேகமும் 8 பிட் பஸ்ஸையும் கொண்டது.

6802 (மைக்ரோபிராஸஸர்) Motorola குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர். 1974-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1 மற்றும் 2 Mhz கிளாக் வேகமும் 8 பிட் பஸ்ஸையும் கொண்டது.

6809 (மைக்ரோபிராஸஸர்) Motorola குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர். 1974-ல் இது அறிமுகப் படுத்தப்பட்டது. இது 1 மற்றும் 2 Mhz கிளாக் வேகமும் 8 பிட் பஸ்ஸையும் கொண்டது. இது வெளி சாதனங்களின் சிங்க் (sync) செயல்பாட்டிற்காக ஒரு வெளி கிளாக் இன்புட்டைக் கொண்டது.


8.3 (•பைல் சிஸ்டம், •பைல் பெயர் எக்ஸ்டெ‎ன்சன்) எம்எஸ்-டாஸில் பய‎ன்படுத்தப்படும் •பைல் பெயர் நீளத்தி‎ன் சுருக்கமான குறிப்பு. முதல் எட்டு கேரக்டர்கள் •பைலி‎ன் பெயரையும், அடுத்த மூ‎ன்று கேரக்டர்கள் அந்த •பைலின் டைப்பைக் குறிக்கும்படி “????????.???” எ‎ன்ற அமைப்பில் அமைந்ததாகும். விண்டோஸ் 95 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டங்கள் நீண்ட •பைல் பெயரினை ஏற்றுக் கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது.

802 (நெட்வொர்க்கிங்) IEEE-யினால் உருவாக்கப்பட்ட ஒரு நெட்வொர்க் செயல்தரத்தின் அமைப்பு. கீழே கொடுக்கப்பட்ட பட்டியல் அதில் உள்ள சில அமைப்பாகும். IEEE 802.1: நெட்வொர்க் மேலாண்மையுடன் தொடர்புடைய அமைப்பு. IEEE 802.2: OSI Reference மாடலில் டேட்டா லிங்க் லேயருக்கான பொதுவான அமைப்பு. IEEE ஆனது இந்த லேயரை இரண்டு துணை லேயராக பிரிக்கிறது. லாஜிக்கல் லிங்க் கன்ட்ரோல் லேயர் (Logical Link Control layer) மற்றும் மீடியா அக்சஸ் கன்ட்ரோல் லேயர் (Media Access Control Layer). மீடியா அக்சஸ் கன்ட்ரோல் லேயர் பல்வேறு நெட்வொர்க் அமைப்புகளாக உள்ளது. அதன் அமைப்பு IEEE 802.3-லிருந்து IEEE 802.5 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. IEEE 802.3: CSMA/CD-யில் பயன்படுத்தப்படும் பஸ் நெட்வொர்க்கின் MAC லேயரை வரையறுக்கிறது. இதுவே ஈத்தர்நெட் தரத்தின் அடிப்படையாகும். IEEE 802.4 டோக்கன் பஸ் மெக்கானிசத்திற்கு (token bus networks) பயன்படுத்தப்படும் பஸ் நெட்வொர்க்கின் MAC லேயரை வரையறுக்கிறது. IEEE 802.5 : டோக்கன்-ரிங் நெட்வொர்க்கின் MAC லேயரை வரையறுக்கிறது. IEEE 802.6 : Metropolitan Area networkகளை (நகரப் பகுதி நெட்வொர்க்) வரையறுக்கிறது.

802.11 (நெட்வொர்க்கிங்) வயர்லெஸ் லேன் (LAN) தொழில்நுட்பத்திற்காக IEEE-யினால் உருவாக்கப்பட்ட ஒரு நெட்வொர்க் அமைப்பைக் குறிக்கிறது. 802.11 ஆனது ஒரு வயர்லெஸ் பயனாளருக்கும், ஒரு பேஸ் நிலையதிற்கும் அல்லது மற்றொரு பயனாளருக்கும் இடையில் காற்று வெளியில் ஏற்படும் இணைப்பை குறிக்கிறது. 1997-ல் IEEE இந்த வடிவமைப்பை ஏற்றுக் கொண்டது. 802.11 குடும்பத்தில் பல வடிவமைப்புகள் உள்ளது. 802.11 ஆனது வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கோடு தொடர்புடையது. இது frequency hopping spread spectrum (FHSS) முறையைப் பயன்படுத்தியோ, direct sequence spread spectrum (DSSS) முறையைப் பயன்படுத்தியோ 2.4 GHz band-ல் ஒரு வினாடிக்கு 1 அல்லது 2 மெகா பைட் தகவல் வேகத்தை வழங்குகிறது. 802.11a என்பது இதன் ஓர் இணைப்பாகும். இது வய்ரலெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் 5 GHz band-ல் ஒரு வினாடிக்கு 54 மெகா பைட்கள் வரை தகவல் வேகத்தை வழங்குகிறது. 802.11a ஆனது FHSS அல்லது DSSS போன்ற முறைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு orthogonal frequency division multiplexing encoding scheme முறையைப் பயன்படுத்துகிறது. 802.11b (இது 802.11 High Rate அல்லது Wi-Fi எனவும் குறிப்பிடப் படுகிறது) ஆனது 802.11-ன் மற்றொரு இணைப்பாகும். இது வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் பயன்படுகிறது. மேலும் இது 2.4 GHz band-ல் ஒரு வினாடிக்கு 11 மெகா பைட் தகவல் வேகத்தை வழங்குகிறது. 802.11b ஆனது DSSS முறையை மட்டுமே பயன்படுத்துகிறது. 802.11g ஆனது வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கோடு தொடர்புடையது. இது 2.4 GHz band-ல் ஒரு வினாடிக்கு 20-க்கும் மேற்பட்ட மெகா பைட் அளவு தகவல் வேகத்தை வழங்குகிறது.

8008 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர். 1972-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 200Mhz கிளாக் வேகமும் 8 பிட் பஸ்ஸையும் கொண்டது.

8080 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒரு வகை மைக்ரோ பிராஸஸர். இது 1974-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதான் முதலாவது மைக்ரோ கம்ப்யூட்டரின் பிரைன் (மூளை) ஆகும். இது 2 மெகா ஹெர்ட்ஸ் கிளாக் வேகத்தையும் ஒரு 8 பிட் பஸ்ஸையும் கொண்டது.

8086 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒரு வகை மைக்ரோ பிராஸஸர். இது 1977-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 5, 8 மற்றும் 10 மெகா ஹெர்ட்ஸ் கிளாக் வேகத்தையும் ஒரு 16 பிட் பஸ்ஸையும் கொண்டது.

8088 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒரு வகை மைக்ரோ பிராஸஸர். இது 1978-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 5, மற்றும் 8 மெகா ஹெர்ட்ஸ் கிளாக் வேகத்தையும் ஒரு 8 பிட் பஸ்ஸையும் கொண்டது.

68000 (மைக்ரோபிராஸஸர்) Motorola குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர். 1979-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 6Mhz கிளாக் வேகமும் 16 பிட் பஸ்ஸையும் கொண்டது.

80286 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர். 1982-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 6, 8, 10, மற்றும் 12.5 Mhz கிளாக் வேகமும் 16 பிட் பஸ்ஸையும் கொண்டது.

80287 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒருவகை math coprocessors. 1982-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிராஸஸரோடு இணைந்த 6, 8, 10, மற்றும் 12.5 Mhz கிளாக் வேகமுடையது.

80386 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒருவகை மைக்ரோபிராஸஸர். 1985-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 16, 20, 25, மற்றும் 33 Mhz கிளாக் வேகமும் SX என்ற அமைப்பில் 16 பிட் பஸ்ஸையும், DX அமைப்பில் 32 பிட் பஸ்ஸையும் கொண்டது. SX அமைப்பில் ஆன்போர்டு கணித கோ-பிராஸஸர் இருக்காது.

80387 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒருவகை math coprocessors. 1985-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிராஸஸரோடு இணைந்த 16, 20, 25, மற்றும் 33 Mhz கிளாக் வேகமுடையது.

80486 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒரு வகை மைக்ரோ பிராஸஸர். இது 1989-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. DX அமைப்பில் 25, 33, மற்றும் 50 Mhz கிளாக் வேகமும், ஒரு 32 பிட் பஸ்ஸையும் கொண்டதாக இருந்தது. SX அமைப்பில் 16 Mhz கிளாக் வேகம் கொண்டதாக இருந்தது. SX அமைப்பில் ஆன்-போர்டு கணித கோ-பிராஸஸர் இல்லை.

80487 (மைக்ரோபிராஸஸர்) இன்டல் குடும்பத்தின் ஒரு வகை மைக்ரோ பிராஸஸர். இது 1989-ல் அறிமுகப் படுத்தப்பட்டது. DX அமைப்பில் பிராஸஸரோடு இணைந்த 25, 33, மற்றும் 50 Mhz கிளாக் வேகம் கொண்டது.

9445 (மைக்ரோபிராஸஸர்) Fairchild குடும்பத்தின் ஒருவகை (CPU-வின்) மைக்ரோ பிராஸஸர். இது 1983-ல் அறிமுகப் படுத்தப்பட்டது. இது வினாடிக்கு 5 மற்றும் 8 மெகா ஹெர்ட்ஸ் கிளாக் வேகத்தையும் 16 பிட் பஸ்ஸையும் கொண்டதாக இருந்தாலும், இது ஒரு octal machine brain ஆகும். இது டேட்டா ஜெனரல் நோவா இன்ஸ்ட்ரக்சன் அமைப்புடன் மிலிட்டரி செயல்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது.

.3GR files (•பைல் வகை) விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ள இன்டல் 80386 அல்லது அதற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்ட் மற்றும் கிரா•பிக்ஸ்களை மேம்படுத்திக் காட்டுவதற்கு பயன்படுகிறது.

கணினி அகராதியில் சில பக்கங்கள் - 2 (முன்னுரை)

முன்னுரை...

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கடின உழைப்பிற்கு பிறகு, ‘எளிய தமிழ் கணினி கலைச்சொற்களஞ்சிய அகராதி’ என்ற இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. மற்ற கணினி அகராதியைப் போல், ஒரு குறிப்பிட்ட சொல்லிற்கு அதன் தமிழ் மொழிப் பெயர்ப்பைக் கூறாமல், அதனைப் பற்றிய முழுமையான விபரம் இயன்ற அளவிற்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.தொழில்நுட்ப நூலினைப் பொறுத்தவரை முழுமையாக தமிழில் கொண்டு வருதல் என்பது இயலாத காரியம். ஆங்கில சொற்களின் கலப்பை தவிர்க்க முடியாது. அதுவும் குறிப்பாக கம்ப்யூட்டரைப் பற்றிய நூலில் பெரும்பாலும் சாத்தியமில்லை. அவ்வாறு ஆங்கிலம் கலவாமல் ஒவ்வொரு சொல்லையும் தமிழ்ப்படுத்திக் கூறினால், அந்த நூல் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும். நடைமுறை பயன்பாட்டிற்கு உதவாது. இதற்கு பல உதாரணங்கள் புத்தக உலகில் உள்ளன. எனவேதான் இந்த நூலில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியில் முழுமையான கணினி என்பது இன்னமும் எட்டாத ஒன்றாக உள்ளது. அவ்வாறு முழுமையடைந்தாலும், அதில் கம்ப்யூட்டரைப் பற்றிய புதிய மேம்பாடுகளை அவ்வப்போது தமிழில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான பயனை அடைய முடியும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் நிலை இருக்காது. அதன் மூலம் நாம் கம்ப்யூட்டர் துறையில் மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும்.இந்த அகராதியைப் பொறுத்த வரையில், ஆபரேட்டிங் சிஸ்டம், நெட்வொர்க், சாப்ட்வேர், இண்டர்நெட், கம்ப்யூட்டர் தரம், வரையறை, கம்ப்யூட்டர் மொழிகள் என கம்ப்யூட்டர் துறையின் பல பிரிவுகள் தொடர்பான, ஏறக்குறைய 6500 சொற்கள் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும், அடைப்புக்குறியினுள் அது கம்ப்யூட்டர் துறையின் எந்தப் பிரிவைச் சார்ந்தது என்ற குறிப்புடன் விளக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சொல் கம்ப்யூட்டர் துறையின் எந்தப் பிரிவைச் சார்ந்தது என்பதை எளிதில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த நூலின் இறுதியில் பிற்சேர்க்கைப் பகுதியில் கம்ப்யூட்டர் துறையின் சுருக்கச் சொற்களுக்கான விரிவாக்கம், நெட்வொர்க்கிங்கில் பயன்படுத்தப்படும் நாட்டுப் பெயர்களின் சுருக்கப்பட்டியல், கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும், பல்வேறு •பைல்களின் வகையைக் குறிப்பிடும் •பைல் பெயர் எக்ஸ்டென்சன் பட்டியல் போன்றவைக் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உங்களுக்கு அதிகம் பயன்படும் என நம்புகிறோம். இந்த நூல் தொடர்பான விமர்சனங்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன. இந்த நூலில் காணப்படும் நிறைகள், குறைகளைச் சுட்டிக் காட்டினால், அவை அடுத்த பதிப்பில் சரி செய்து நூலை மேலும் செம்மையாக வெளியிட உதவியாக இருக்கும். அவ்வாறு சுட்டிக் காட்டி அனுப்புவோருக்கு நன்றியுடையவனாக இருப்பேன். உங்கள் விமர்சனங்களை parasuraman_india@yahoo.com என்ற ஈமெயில் முகவரிக்கோ அல்லது கீழே உள்ள முகவரிக்கோ அனுப்புங்கள்.மணிமேகலைப் பிரசுரத்தில் இது எனது மூன்றாவது நூல். இந்த அகராதியை சிறப்பு நூலாக வெளியிட்டிருக்கும் மணிமேகலைப் பிரசுர நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் உள்ள பிழைகளை திருத்திக் கொடுத்த திரு.சந்திரசேகர் அவர்களுக்கும், இந்த நூலை சிறப்பாக அச்சிட்டு கொடுத்த அச்சகத்தாருக்கும் எனது நன்றி. இந்த நூலை எழுதுவதில் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திய எனது நண்பர்கள் திரு.V.தேவராஜு மற்றும் K.ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும், இந்த நூலை எழுதுவதில் எனக்கு பலவழிகளில் உதவி செய்த எனது மனைவிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவை எல்லாவற்றுக்கும் மேல் இந்த நூலை வாங்கி ஆதரவு கொடுக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன்,த.பரசுராமன்.7, பிள்ளையார் கோவில் தெரு,தேவாங்கபுரம், பள்ளிபாளையம்,ஈரோடு - 638 006.ஈமெயில் : parasuraman_india@yahoo.com

அடுத்த பதிவில் அகராதியின் பக்கங்கள்.......

Thursday, June 09, 2005

தமிழ் வாழுமா.... சாகுமா...?!

தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும், தினசரி வாழ்வில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நினைத்தால், மேற்கண்ட எண்ணம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி.

சமீப வருடங்களில் தமிழக தலைநகர் சென்னைக்கு அதிகமாக சென்று வருகிறேன். அங்கு நான் காண்பதெல்லாம் நேர்மாறாகவே உள்ளது. அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாக இருப்பது ஆங்கிலமே. எங்கேனும் செல்ல வழி கேட்கவோ அல்லது ஒன்றைப் பற்றி விசாரிக்கவோ ஆங்கிலம்தான் பயன்படுகிறது.

கீழ்தட்டு மக்கள் மட்டுமே தமிழில், அதுவும் சென்னைக்கே உரிய வட்டாரமொழியில் பேசுகின்றனர். மற்றபடி ஒரு தெளிவான தமிழ் பயன்பாடு அங்கு இல்லை. இலக்கிய தமிழில் பேசமுடியாது. ஆனால் பிழையற்ற தமிழில் பேசப்படுவதில்லை.

இந்த நிலையில் தமிழைக் காக்க வேண்டும் எனக்கூச்சல் போடுபவர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள். எந்த மொழியில் பேசுவது என்பது ஒவ்வொரு தனிமனிதர்களின் விருப்பம். ஒவ்வொருவரையும் நாம் அழைத்து நீங்கள் இன்ன மொழியில்தான் இனி பேசவேண்டும் என வற்புறுத்த முடியாது. அல்லது அவர்களை பின் தொடர்ந்து சென்று ஒவ்வொன்றிற்கும் இப்படி பேசுங்கள் எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று வந்த எனது நண்பரும், ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருந்தால், சென்னையில் உடனடி வேலை எனக்கூறினார். இந்த நிலையில் வயிற்றுபிழைப்புக்காக ஆங்கிலம் கற்று பேசுவதா அல்லது கொள்கைக்காக தமிழிலேயே பேசிக் கொண்டிருப்பதா நினைத்துப் பாருங்கள். வயிற்று பிழைப்பா கொள்கையா என எடுத்துக் கொண்டால், முதலில் வயிற்றுபிழைப்பே வரும்.

தமிழ் தமிழ் எனக் கூவிக் கொண்டிருப்பவர்களின் தினசரி உணவு மற்றும் மற்ற வசதிகளுக்கு எப்போதும் பிரச்சனை இல்லை. அதனால் தமிழ்...தமிழ்... எனக் கூவுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்க மக்களின் நிலை. தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஆங்கிலத்தையும் நம்பியாக வேண்டியிருக்கிறது. வெறும் தமிழ் மட்டுமே சோறு போட்டுவிடாது என்பது உண்மை.

தமிழகமே கண்ணீர் கடலில்.....!!!

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று, தாயாரில்லாமல் அவர்களை தனியொரு மனிதனாக வளர்த்து, படிக்க வைத்து, அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்து, திருமணத்திற்கு பிறகும் அந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களை கட்டிக் கொடுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் உரிய மரியாதை செய்து... அப்பப்பா..... எவ்வளவு வேதனையான வாழ்க்கை.

அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு பெண்ணும் தன்புகுந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் அவர்களுக்கு உரிய அறிவுரை, ஆறுதல் கூறி அவர்களை வழிநடத்தியவர்தான் சிதம்பரம்.

அவர்தன் பெண் பிள்ளைகள் தங்கள் புகுந்த வீட்டில் பிரச்சனைகளோடு வாழ்வதை பொறுக்கமாட்டாமல், வேதனையோடு செல்லும்போது தெரியாமல் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார். இத்தகைய ஒரு மேம்பட்ட மனிதர் இறந்துவிட்டால் தமிழ்நாடே ஏன் வருத்தப்படாது... கண்ணீர் கடலில் சிக்காது...

சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் 'மெட்டி ஒலி' என்ற தொடரில் வரும் பெரியவர் சிதம்பரத்தின் வாழ்க்கைதான் மேலே நீங்கள் படித்தது.

டிவி தொடர் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்படி ஆட்டி படைக்கிறது என்பது 'மெட்டி ஒலி' தொடர் ஓர் உதாரணம். இந்தத் தொடரைப் பார்ப்பதற்கு பலர் வீட்டு/அலுவலக வேலைகளை அப்படியே போட்டு வைத்துவிட்டு டிவி முன்னால் அமர்ந்துவிடுகின்றனர். வீட்டில் சமையல் வேலை என எதுவாக இருந்தாலும் அப்படியே நிறுத்திவிட்டு தொடரைப் பார்க்க அமர்ந்துவிடுகின்றனர்.

டிவி தொடர்களை ஒருபக்கம் குறைகூறிக் கொண்டிருந்தாலும், இது போன்ற தொடர் மக்களை ஆட்டி படைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

Sunday, May 01, 2005

பொதியா.... தொகுப்பா....???

சில சமயம் கணினி தொழில்நுட்ப சொற்களை தமிழில் மொழிபெயர்க்கும்போது, ஒரு சொல்லுக்கு இணையான சுலபமான சொற்களை விட்டுவிட்டு, கொஞ்சம் சுற்றி வளைக்கும் சொல்லைக் குறிப்பிடும் நிலை நிகழ்கிறது. உதாரணமாக Package என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் 'தொகுப்பு' என்ற சொல்லைக் கூறலாம்.

ஆனால் http://www.domesticatedonion.net/blog/?itemid=464 என்ற பதிவிலும் மற்றும் சில பதிவுகளிலும்

>>இப்படி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் போடுவதற்குப் பொதியாக்கம் >>(Software packaging) என்று சொல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் >>மைக்ரோஸாப்ட் ஆபீஸ் பொதி. வேர்ட்லிருந்து வெட்டி பவர்பாயிண்டில் >>ஒட்டலாம். பவர்பாயின்டை வேர்டாகச் சேமிக்கலாம்.

'பொதி' என்ற சொல்லை கையாள்கின்றனர். பொதி என்றால் 'சுமை' என்று பொருள். ஆனால் தொகுப்பு என்ற சொல் இதற்கு இணையானது. சரியான பொருளையும் தரக்கூடியது. 'தொகுப்பு' என்ற சொல்லை இனி பயன்படுத்தலாம் அல்லவா...???

Wednesday, April 20, 2005

ரஜினி, கமல், விஜய் ரேஸ்...

தமிழ் புத்தாண்டில் வந்த ரஜினி, கமல், விஜய் படங்களில் எது அதிக நாள் தியேட்டரில் ஓடும்னு நீங்கள் நினைக்கிறீங்க...??? ரேஸ்ல எது முந்தும்னு எழுதுங்களேன்...

Saturday, February 19, 2005

நடிப்பை ரசிக்கலாம்... நிஜத்தை ரசிக்க முடியாது...!!


சமீபத்தில் வெளிவந்த 'டான்சர்' படத்தில் கதாநாயகனாக நடித்த குட்டி என்பவருக்கு ஒரு கால் இல்லை. இவர் எங்கள் ஊரில் கூட நடன நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியவர். இவரின் இத்தகைய வளர்ச்சி மற்றும் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இனிவரும் படங்களில் இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, தன்னுடைய ஊனத்தை வைத்து இனியும் படங்களில் நடிக்க கூடாது. உதாரணமாக நடிகை சுதா சந்திரனைக் கூறலாம். அவரும் ஒரு கால் ஊனமானவர். ஆனாலும் செயற்கை கால் மூலம் படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். ஏனென்றால் நம்மால் நடிப்பை ரசிக்க முடியுமே தவிர, நிஜங்களை ரசிக்க முடியாது...

Monday, February 14, 2005

தேவதை எஸ்கேப் - பிச்சாண்டியின் காதல் அனுபவங்கள்

வணக்கமுங்க. எம்பேரு பிச்சாண்டி. இன்னிக்கு என்னோட டாவு எக்ஸ்பிரீயன்ஸ உங்ககிட்ட சொல்லி என்னோட மனபாரத்தை இறக்கிடலாமுன்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு முழுசா படிச்சுட்டு அப்புறம் எங்க வேணாலும் போங்க. தர்ம மாத்து மாத்தறதுன்னா முன்னாடியே சொல்லிருங்க. அட்ரஸ் தர்றேன். என் ஃபிரண்ட் அங்கதான் இருப்பான். என்ன வேணாலும் பண்ணிக்குங்க..! நான் கேட்க மாட்டேன். இலவச இணைப்பா எப்ப பாத்தாலும் ஓசு டீ கேட்டு தொந்திரவு பண்ற இன்னொருத்தனும் அங்கதான் சுத்திட்டு இருப்பான். அவனையும் முடிஞ்சா பின்னி எடுங்க. அதுக்கு தனியா அமவுண்ட் உங்க அட்ரஸுக்கு அனுப்பி வைக்கிறேன். ஹி...ஹி...ஹி...!!

நான் படிச்சது அஞ்சாவதுதாங்க. ஆனா என் டாவு காலேஜுல்லாம் போச்சு. அப்ப என் டாவு படிச்ச காலேஜு வாசல்தான் நான் டீ கடை வெச்சிருந்தேன். கொஞ்சம் ரீஜண்டா கடை இருந்ததுனால என் டாவு எப்பவும் என் கடைக்குதான் வருவா. என்னைப் பாத்ததும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க. அந்த சிரிப்புக்கே எனக்கே தெரியாம நெறைய பேத்துக்கு ஃபிரீயா டீ போட்டு குடுத்திருக்கேன். குடிச்சிட்டு ஒரு வழி வழிஞ்சுட்டு போவாங்க. அப்புறந்தான் தெரியும் நான் டீக்கு காசு வாங்கலைன்னு. போனா போகுதுங்க. என் தேவதைக்கு முன்னால டீ காசு என்னங்க பெருசு. இப்படியே ஒரு வருசம் ஓடிடுச்சிங்க. டெய்லியும் சிரிப்பும் ஃபிரீ டீயுமாவே போச்சிங்க.

அப்புறந்தாங்க எனக்குன்னு ஒரு வில்லன் வந்தான். அவனைப் பாத்தா சோதா மாதிரிதாங்க இருந்தான். அவன் என் டாவோட கொஞ்சுற கொஞ்சல்ஸ் இருக்கு பாருங்க. அதுக்காகவே நிறைய நாளு அவனுக்கு டீயில நிறைய சுடுதண்ணி புடிச்சி டீ போட்டிருக்கேன். அவனும் அவளைப் பாத்திட்டு ஜொள் விட்டுட்டு குடிச்சிடுவான். இவனை எப்படி என்னோட டாவுகிட்ட இருந்து கழட்டி விடறதுன்னு யோசனை பண்ணினேன். அதுக்கும் ஒரு சான்ஸ் வந்திச்சி.

ஒருநாள் அவன் இல்லாம என் டாவு மட்டும் தனியா வந்திச்சி. இதுதான் சான்ஸ் விட்றக்கூடாதுன்னு நினைச்சு முதல் பாணத்தை விட்டேன். 'அம்மு. அவன் இன்னிக்கி வரலையா..?' அம்முங்கறது என் டாவுக்கு நான் வெச்ச செல்லபேருங்க. என் டாவை பேர் சொல்லி நான் கூப்பிடமாட்டேன். உங்களுக்கும் கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஏமாந்தீங்களா... (நான் ஏமாந்தது பின்னாடி இருங்குதுங்க..!). 'வரலை'ன்னு என் டாவுவின் வாய்ஸ் தேன் மாதிரி வந்திச்சி. நான் என்னோட கதையை அவுத்துவுட்டேன். ' அம்மு அவன் நேத்து எங்கிட்ட வந்தான். அவன் உன்னை லவ் பண்றதா சொன்னான். இனிமே அவன்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்க. இனிமே அவன்கிட்ட பேசாதே.' அடுக்கடுக்கா ரீல் உட்டேன். என் டாவு ஒருமாதிரி ஆச்சி. ஆஹா மேட்டர் ஒர்க் அவுட் ஆயிடுச்சினு நினைச்சேன். ஆனா அதுக்கு அடுத்தது என் டாவு பேசினது கேட்டு, என் டீகடை பாயிலர், கண்ணாடி கிளாசு, பால் குண்டா... எதிர்தாப்புல சைக்கிள்ல போறவன், அப்புறம் என் இதயம் எல்லாத்திலையும் ஒரு தவுசன்வாலா வெடி வெடிச்ச மாதிரி சவுண்ட் கேட்டிச்சி. 'நான் அவன்கிட்ட நேத்து என்னோட லவ்வ சொல்லிட்டேன். ஆனா அவன் எனக்கு பதில் சொல்லை. அத உங்கிட்ட வந்து சொல்லிட்டு போயிட்டானா... அவனை நான் பாத்துக்குறேன்.' சொல்லிட்டு என் டாவு பறந்து போயிடிச்சி. நான் வெச்ச குண்டு எனக்கே வெடிச்சிடிச்சி.

சரி என்ன பண்றதுன்னு எம்மனச நானே தேத்திகிட்டேன். இதுக்காகவெல்லாம் நான் சோகமா மாற முடியுங்களா... அப்படி ஆகனும்னா நான் இதுவரைக்கும் பதினாலு டாவை இப்படி விட்டிருக்கேன். சரி விடுங்க. ஃபீல் பண்ணாதீங்க. அடுத்த டாவு மாட்டமல போவும்....

என் தேவதையின் நினைவாக...!

(என்னவோ தெரியவில்லை. என்னால் இன்று இதுபோன்ற பதிவுகளையே இட முடிகிறது. பொது நோக்கோ அல்லது சுய நோக்கோ தெரியவில்லை)...

என் தேவதை
இப்போது அருகில்
இல்லை...!

ஆனாலும் அவள்
எப்போதும் என்னுள்
இருக்கிறாள்..!
என் நினைவுகள்
எல்லாம் அவளே
நிறைந்திருக்கிறாள்..!
அவளின்றி எப்போதும்
நானில்லை.

என்னுடன்
அவள் பயணித்த
நாட்கள் மறக்க
இயலாதவை.
இருவரும்
காற்றில் மிதந்த
நினைவுகள் அவை.
எங்களுடன்
பயணித்த
காற்றுக்கு மட்டுமே
அவை தெரியும்.

அவளுடன்
எடுத்துக் கொண்ட
முதல் புகைப்படம்
மறக்க இயலா
பதிவுகள்.
அவள் கிடைப்பாளா
என்ற ஏக்கத்தை
என் கண்களில்
சொல்பவை.

என் தேவதை
இப்போது அருகில்
இல்லை...!!

காதலர் தினம் - பிப்ரவரி 14

காதலர் தினம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒருவரை ஒருவர் நேசிக்கும் அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். பெற்றவர்கள் - பிள்ளைகள், சகோதரன் - சகோதரி, காதலன் - காதலி என அனைவருக்கும் பொதுவானதாகவே நான் நினைக்கிறேன். எனவே உங்களின் அன்பை உரியவர்களிடம் தாராளமாகவே 'வார்த்தைகளால்' தெரியப்படுத்துங்கள். வாய்விட்டுச் சொல்வதால் மனதும் தெளிவாக இருக்கும். நானும் இன்று என் சகோதரிக்கு என் அன்பைக் கூறினேன். நீங்களும் உங்களை நேசிக்கும் அனைவரிடமும் கூறுங்கள். கூறுவீர்களா...???