தமிழகமே கண்ணீர் கடலில்.....!!!
ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று, தாயாரில்லாமல் அவர்களை தனியொரு மனிதனாக வளர்த்து, படிக்க வைத்து, அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்து, திருமணத்திற்கு பிறகும் அந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களை கட்டிக் கொடுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் உரிய மரியாதை செய்து... அப்பப்பா..... எவ்வளவு வேதனையான வாழ்க்கை.
அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு பெண்ணும் தன்புகுந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் அவர்களுக்கு உரிய அறிவுரை, ஆறுதல் கூறி அவர்களை வழிநடத்தியவர்தான் சிதம்பரம்.
அவர்தன் பெண் பிள்ளைகள் தங்கள் புகுந்த வீட்டில் பிரச்சனைகளோடு வாழ்வதை பொறுக்கமாட்டாமல், வேதனையோடு செல்லும்போது தெரியாமல் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார். இத்தகைய ஒரு மேம்பட்ட மனிதர் இறந்துவிட்டால் தமிழ்நாடே ஏன் வருத்தப்படாது... கண்ணீர் கடலில் சிக்காது...
சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் 'மெட்டி ஒலி' என்ற தொடரில் வரும் பெரியவர் சிதம்பரத்தின் வாழ்க்கைதான் மேலே நீங்கள் படித்தது.
டிவி தொடர் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்படி ஆட்டி படைக்கிறது என்பது 'மெட்டி ஒலி' தொடர் ஓர் உதாரணம். இந்தத் தொடரைப் பார்ப்பதற்கு பலர் வீட்டு/அலுவலக வேலைகளை அப்படியே போட்டு வைத்துவிட்டு டிவி முன்னால் அமர்ந்துவிடுகின்றனர். வீட்டில் சமையல் வேலை என எதுவாக இருந்தாலும் அப்படியே நிறுத்திவிட்டு தொடரைப் பார்க்க அமர்ந்துவிடுகின்றனர்.
டிவி தொடர்களை ஒருபக்கம் குறைகூறிக் கொண்டிருந்தாலும், இது போன்ற தொடர் மக்களை ஆட்டி படைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
<< Home