Thursday, June 09, 2005

தமிழ் வாழுமா.... சாகுமா...?!

தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும், தினசரி வாழ்வில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நினைத்தால், மேற்கண்ட எண்ணம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி.

சமீப வருடங்களில் தமிழக தலைநகர் சென்னைக்கு அதிகமாக சென்று வருகிறேன். அங்கு நான் காண்பதெல்லாம் நேர்மாறாகவே உள்ளது. அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாக இருப்பது ஆங்கிலமே. எங்கேனும் செல்ல வழி கேட்கவோ அல்லது ஒன்றைப் பற்றி விசாரிக்கவோ ஆங்கிலம்தான் பயன்படுகிறது.

கீழ்தட்டு மக்கள் மட்டுமே தமிழில், அதுவும் சென்னைக்கே உரிய வட்டாரமொழியில் பேசுகின்றனர். மற்றபடி ஒரு தெளிவான தமிழ் பயன்பாடு அங்கு இல்லை. இலக்கிய தமிழில் பேசமுடியாது. ஆனால் பிழையற்ற தமிழில் பேசப்படுவதில்லை.

இந்த நிலையில் தமிழைக் காக்க வேண்டும் எனக்கூச்சல் போடுபவர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள். எந்த மொழியில் பேசுவது என்பது ஒவ்வொரு தனிமனிதர்களின் விருப்பம். ஒவ்வொருவரையும் நாம் அழைத்து நீங்கள் இன்ன மொழியில்தான் இனி பேசவேண்டும் என வற்புறுத்த முடியாது. அல்லது அவர்களை பின் தொடர்ந்து சென்று ஒவ்வொன்றிற்கும் இப்படி பேசுங்கள் எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று வந்த எனது நண்பரும், ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருந்தால், சென்னையில் உடனடி வேலை எனக்கூறினார். இந்த நிலையில் வயிற்றுபிழைப்புக்காக ஆங்கிலம் கற்று பேசுவதா அல்லது கொள்கைக்காக தமிழிலேயே பேசிக் கொண்டிருப்பதா நினைத்துப் பாருங்கள். வயிற்று பிழைப்பா கொள்கையா என எடுத்துக் கொண்டால், முதலில் வயிற்றுபிழைப்பே வரும்.

தமிழ் தமிழ் எனக் கூவிக் கொண்டிருப்பவர்களின் தினசரி உணவு மற்றும் மற்ற வசதிகளுக்கு எப்போதும் பிரச்சனை இல்லை. அதனால் தமிழ்...தமிழ்... எனக் கூவுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்க மக்களின் நிலை. தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஆங்கிலத்தையும் நம்பியாக வேண்டியிருக்கிறது. வெறும் தமிழ் மட்டுமே சோறு போட்டுவிடாது என்பது உண்மை.

தமிழகமே கண்ணீர் கடலில்.....!!!

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று, தாயாரில்லாமல் அவர்களை தனியொரு மனிதனாக வளர்த்து, படிக்க வைத்து, அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்து, திருமணத்திற்கு பிறகும் அந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களை கட்டிக் கொடுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் உரிய மரியாதை செய்து... அப்பப்பா..... எவ்வளவு வேதனையான வாழ்க்கை.

அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு பெண்ணும் தன்புகுந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் அவர்களுக்கு உரிய அறிவுரை, ஆறுதல் கூறி அவர்களை வழிநடத்தியவர்தான் சிதம்பரம்.

அவர்தன் பெண் பிள்ளைகள் தங்கள் புகுந்த வீட்டில் பிரச்சனைகளோடு வாழ்வதை பொறுக்கமாட்டாமல், வேதனையோடு செல்லும்போது தெரியாமல் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார். இத்தகைய ஒரு மேம்பட்ட மனிதர் இறந்துவிட்டால் தமிழ்நாடே ஏன் வருத்தப்படாது... கண்ணீர் கடலில் சிக்காது...

சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் 'மெட்டி ஒலி' என்ற தொடரில் வரும் பெரியவர் சிதம்பரத்தின் வாழ்க்கைதான் மேலே நீங்கள் படித்தது.

டிவி தொடர் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்படி ஆட்டி படைக்கிறது என்பது 'மெட்டி ஒலி' தொடர் ஓர் உதாரணம். இந்தத் தொடரைப் பார்ப்பதற்கு பலர் வீட்டு/அலுவலக வேலைகளை அப்படியே போட்டு வைத்துவிட்டு டிவி முன்னால் அமர்ந்துவிடுகின்றனர். வீட்டில் சமையல் வேலை என எதுவாக இருந்தாலும் அப்படியே நிறுத்திவிட்டு தொடரைப் பார்க்க அமர்ந்துவிடுகின்றனர்.

டிவி தொடர்களை ஒருபக்கம் குறைகூறிக் கொண்டிருந்தாலும், இது போன்ற தொடர் மக்களை ஆட்டி படைத்துக் கொண்டுதான் இருக்கிறது.